தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு -அண்ணாமலை
|தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் பெருங்குடியில் பட்டியல் சமூக மக்கள் 5 பேரை, ஆயுதத்தால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 6 வயது சிறுவன் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.
வாக்கு அரசியலுக்காக, குற்றவாளிகளுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்காமல், தொடர்ந்து சமூகங்களுக்கு இடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது தி.மு.க. அரசு. இதனால் பாதிக்கப்படுவது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சாதாரண பொதுமக்களே என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும். பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தி.மு.க. அரசு கண்டும் காணாததுபோல் இருப்பது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.