< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை - முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து வெறிச்செயல்
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை - முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து வெறிச்செயல்

தினத்தந்தி
|
27 Oct 2023 8:37 AM IST

திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர், பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க.வில் 5-வது வார்டு வட்ட பிரதிநிதியாக உள்ளார். இவருடைய மகன் காமராஜ் (வயது 35). என்ஜினீயரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான இவர்கள், ஆர்.வி.என்ஜினீயரிங் என்ற பெயரில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர். இவர்களது வீட்டின் கீழ் பகுதியில் அலுவலகம் உள்ளது.

நேற்று காலை 9.30 மணியளவில் காமராஜ் மட்டும் அலுவலகத்தில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் 6 பேர் கும்பல் கத்தி, அரிவாளுடன் முகமூடி அணிந்து அங்கு வந்தனர். அவர்களில் 3 பேர் காமராஜின் அலுவலக வாசலில் நின்று கொண்டனர். மற்ற 3 பேர் அலுவலகத்துக்குள் புகுந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காமராஜ், கூச்சலிட்டபடி அந்த கும்பலிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் மர்மகும்பல் அவரை அலுவலகத்துக்குள்ளேயே வைத்து சரமாரியாக வெட்டினர். இதல் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த காமராஜ், ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.

அதற்குள் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். உடனே மர்ம கும்மல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காமராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக இறந்தார். கொலையாளிகள் நேற்று காலை முதலே காமராஜை பின்தொடர்ந்து சென்று, கடைசியாக அவர் அலுவலகத்துக்குள் சென்றதும் உள்ளே புகுந்து வெட்டிக்கொன்று உள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

எண்ணூர் பஜார் பகுதியில் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நூலகம் கட்டி வருகிறார்கள். அந்த பணியில் காமராஜ் ஈடுபட்டு இருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த படுகொலை குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையான காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காமராஜிக்கு யாமினி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்