< Back
மாநில செய்திகள்
விவசாயத்தை அழிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது - சசிகலா அறிக்கை
மாநில செய்திகள்

விவசாயத்தை அழிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது - சசிகலா அறிக்கை

தினத்தந்தி
|
6 Oct 2022 8:50 PM IST

விவசாயத்தை அழிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலவும் உரத்தட்டுப்பாடு மிகவும் கவலை அடைய செய்கிறது. தற்போது டிஏபி, யூரியா போன்ற உரங்கள் எங்குமே கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனைப் படுகிறார்கள். இன்றைய திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் விவசாயத்தை அழிக்கின்ற வகையில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

திமுக தலைமையிலான அரசு எதைப்பற்றியும் யோசிக்காமல்,நடந்து கொண்டிருந்த தூர் வாரும் பணிகளைக் கூட முழுமையாக முடித்திடாமல், இந்த வருடம் மேட்டூரில் இருந்து முன்கூட்டி தண்ணீரை திறந்து, அது எதர்க்கும் பலனளிக்காமல் கடலில் கலந்ததுதான் மிச்சம்.

விவசாயிகளுக்கு மேட்டூரில் முன் கூட்டியே தண்ணீர் திறப்பது தெரிந்து இருந்தால், அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்துகொண்டு தயாராக இருந்திருப்பார்கள். திறந்து விடப்பட்ட தண்ணீரையும் முறையாக பயன்படுத்தியிருப்பார்கள். மேலும், கிளை வாய்க்கால்கள் தூர் வாராததால் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேராமல் பயிர்கள் கருகும் நிலையும் உள்ளது.

அதேபோன்று, இந்த ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு தாங்கள் விளைவித்த நெல்லை, அரசு கொள்முதல் நிலையங்களில் போட முடியாத அவலம்தான் இன்றைக்கு நிலவுகிறது. அதேபோன்று, தமிழக விவசாயிகள் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் தத்தளித்து கொண்டு இருக்கும் சூழலில் தற்போது உரம் கிடைக்காமல் அல்லல் படுவது மிகவும் வேதனை அளிக்கிறது.

திமுக அரசு பதவியேற்றதும் வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்துள்ளதாக மார்தட்டி கொண்ட இந்த அரசால் தமிழக விவசாயத்திற்கு தேவையான அளவு உரத்தை இருப்பு வைத்துக் கொள்ள கூட தெரியவில்லை. எனவே தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்