திமுக அரசு மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்போம் என நாடகம் நடத்தி வருகின்றனர் - அண்ணாமலை
|பிரதமர் மோடி அவர்கள் கொடுத்த வீடு, கேஸ் அடுப்பு போன்றவை இலவசங்கள் அல்ல. அது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அர்ஜூனமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் ஆவார். அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினராக்கி கட்சி அடையாள அட்டையை அண்ணாமலை வழங்கினார். அதைதொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது,
மக்களிடம் கருத்து கேட்போம் எனக் கூறி நாடகம் நடத்தி வருகின்றனர். வசூல் வேட்டைகாகவே மாநில அரசு மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்போம் என நாடகம் நடத்தி வருகின்றனர். கருத்து கேட்போம் என்ற நாடகத்தை நிறுத்தி விட்டு அவர்கள் ஏற்றிய மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் கிட்டத்தட 30 தற்கொலைகள் நடந்துள்ளன. ஆன்லைன் ரம்மிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மாநில அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் பட்சத்தில் தமிழக பாஜக அவர்களுடன் இருப்போம். கல்வி, சுகாதாரம் போன்றவை இலவசங்களாக கொடுக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் கொடுத்த வீடு, கேஸ் அடுப்பு போன்றவை இலவசங்கள் அல்ல. அது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை ஆகும்.
திமுக இலவசம் தருகிறோம் என்ற திட்டங்கள், வெறும் திட்டங்களாக தான் உள்ளது. பாஜக வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுப்போம். மகளிருக்கு இலவசம் என்று கூறிய பஸ் எப்போது வருகிறது என்றே தெரிய வில்லை. ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று வருகிறது. அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால் என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு,
அடுத்த தேர்தல் வரட்டும், அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால், மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களாக இருக்கிறதா என்று பார்ப்போம். அதன் பின் அதை பற்றி பேசலாம். தற்போது பேச கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.