காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசனப் பகுதியில் 2021ம் ஆண்டில் 46.2 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2022ம் ஆண்டு 40.9 லட்சம் டன் நெல் உற்பத்தியும் நடந்துள்ளன. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி உரிமையை காப்பதில் திமுக உறுதியாக உள்ளது.
தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய காவிரி நீரை முறையாக திறந்துவிடவில்லை. தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. நீர் தரவேண்டிய சூழலில் 2.28 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைத்துள்ளது. காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17-ம் தேதிமுதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதுமான நீர் உள்ளபோதும் தமிழகத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மாத வாரியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம். சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா முறையாக பின்பற்றவில்லை. தேவைப்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறுவை பயிர்கள் மட்டுமின்றி சம்பா பயிர்களையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சட்ட வல்லுநர்களைஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.