பொதுமக்களை தி.மு.க அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது - அண்ணாமலை
|தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே.
சென்னை,
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருந்த வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்து, மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது தி.மு.க. ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் என்பவை போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள் ஆகிவிட்டனவே தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக இவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
மத்திய அரசின் நலத் திட்டங்களுக்குத் தங்கள் பெயரை சூட்டிக் கொள்வது தி.மு.க.வுக்குப் புதிதல்ல என்றாலும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே. உண்மையில் தி.மு.க அரசு தமிழக மக்களுக்காகக் கொண்டு வந்த நலத் திட்டங்கள் என்னென்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி விட்டால் போதும் என்று நினைக்கிறதா தி.மு.க.?
தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் ஒதுக்கியதாகத் தெரியவில்லை. மாறாக, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல வீண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விளம்பர ஆட்சி நடத்துவதற்காக, பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதைத் தவிர, பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்கள் எதையும் புதிதாக அறிவிக்கவில்லை.
இந்த ஆண்டாவது, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் என்று நம்பியிருந்த பொதுமக்களை, தி.மு.க அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.