< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தி.மு.க. அரசு கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது - ராமதாஸ்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தி.மு.க. அரசு கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது - ராமதாஸ்

தினத்தந்தி
|
10 July 2024 1:04 PM IST

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 2,994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4,500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளி மணி நேரத்தின் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணிக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிப்பதால் அவர்களால் பாடங்களை நடத்த முடியவில்லை. அதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம்தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அப்போதுதான் காலியாக உள்ள பிற ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப முடியும். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையும் நிர்வாகப் பணிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை மேலும் சீரழித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, காலியாக உள்ள அனைத்துத் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்