< Back
மாநில செய்திகள்
காவிரி டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

காவிரி டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை

தினத்தந்தி
|
25 Jun 2023 1:23 AM IST

காவிரி டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை

காவிரி டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

பொதுக்கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பாபநாசம் கீழ வீதியில் பிரதமர் நரேந்திர மோடியின் 9-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், விவசாய பிரிவு பொது செயலாளர் பூண்டி வெங்கடேசன், தொழிலாளர் பிரிவு செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் மத்திய மண்டல தலைவர் செல்வம் வரவேற்று பேசினார்.

தஞ்சை மண்ணிற்கு பெருமை

கூட்டத்தில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோலை ஆதீனங்களை அழைத்து அவர்களை கவுரவித்து புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவினார். இது தஞ்சை மண்ணிற்கு கிடைத்த பெருமை. தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம்.

தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை

காவிரி டெல்டா மாவட்ட இளைஞர்கள் பலரும் இங்கு வேலையின்றி வெளிநாடுகளில் மிக குறைந்த சம்பளத்திற்கு கஷ்டப்பட்டு வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களின் குடும்ப முன்னேற்றத்திற்காக நான் டெல்டா மாவட்டத்துக்காரர் என்று சொல்லிக் கொள்கிற தமிழக முதல்-அமைச்சரோ, அவருடைய குடும்பத்தினரோ எதுவுமே செய்யவில்லை.

மும்மொழிக் கொள்கையை எதிர்த்த தி.மு.க.வினர் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்கள்.

அதேபோல அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக உள்ளது. ஆனால் ஏழை மக்கள் மூன்றாவது மொழி கற்கக்கூடாது என்று தடுத்து வருகின்றனர். இது தான் திராவிட மாடல் ஆட்சி.

மீண்டும் பா.ஜனதா ஆட்சி

தி.மு.க. காரர்களிடம் ஒன்று கேட்கிறேன். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவரை தவிர வேறு யாராவது தி.மு.க. தலைவராகவோ, தமிழக முதல்-அமைச்சராகவோ வர முடியுமா?. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பிரதமர் மோடி அனுப்பி கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் புகழை தலை நிமிர செய்தவர் பிரதமர் மோடி. 2024 தேர்தலிலும் மத்தியில் மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், செல்வராஜ், தங்க.கென்னடி, பொருளாளர் கண்ணன் மண்டல தலைவர்கள் குமார், நவநீதன் அருண், பாபநாசம் நகர தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பாபநாசம் கிழக்கு மண்டல தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்