தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பா.ஜ.க.தான்- பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு
|2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பல்லடம்,
பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
கொங்கு பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் பொருளாதாரத்திற்கு கொங்கு பகுதி முக்கிய பங்கை வழங்கி வருகிறது. ஜவுளி மற்றும் தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக பல்லடம் உள்ளது. இந்த கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூடியுள்ள மக்களுக்கு நன்றி. என் மண் என் மக்கள் யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. 2024-ல் தமிழகத்தில் பா.ஜ.க.வை மட்டும்தான் அதிகமாக பேசுகின்றனர். 2024-ல் தமிழகம் புதிய சரித்திரத்தை படைக்கும். ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும். டெல்லியில் ஏ.சி. அறையில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.
தமிழகத்தின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு என்னுடைய வாழ்த்துகள். நாடுதான் முழுமையானது என பா.ஜ.க. கருதுகிறது. என்னை பொருத்தளவில் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் மிக சிறப்பானதாக இருக்கிறது. தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்.
பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜ.க. வைத்துள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்திற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. ஐ.மு. கூட்டணி ஆட்சியில் பெரிய அமைச்சரவைகளில் அமைச்சர்களாக இருந்தபோதும் தி.மு.க. எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆரை அவமதிப்பதுபோல் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பா.ஜ.க.தான்.
இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆர்-ஐ நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே. அதனால் தான் திமுக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை இழிவு செய்து ஆட்சி நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் சமீபத்தில் முடிந்தது, இந்நாளில் அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது. 2024-ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். 'என் மண் என் மக்கள்' என்ற பெயரே மக்களுக்கும், பா.ஜ.க.விற்குமான பிணைப்பை காட்டுகிறது. அண்ணாமலை வெறும் யாத்திரை மட்டும் செல்லவில்லை, அனைவருக்கும் அனைத்தும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு வீடாக கொண்டு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதால் என்மீது எதிர்க்கட்சியினர் கோபம் கொண்டுள்ளனர். புதிய இந்தியாவை உருவாக்க நாம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். என் மீது அவதூறுகளை பரப்பி பொய்யான பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். என்னை எதிர்க்க மட்டுமே இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது.
இந்தியா கூட்டணிக்கு டெல்லியில் ஆதரவு இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் கொள்ளையடிக்க இந்தியாகூட்டணி செயல்படுகிறது. இந்தியாகூட்டணியில் பல பிரச்சினைகள் நிலவுகின்றன. கொள்ளையைத் தடுப்பதற்காகவே என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது; தமிழ்நாட்டுடனான எனது உறவு இதயப்பூர்வமானது.
370 பிரிவு ரத்துக்குபிறகு காஷ்மீர் சட்டப்பேரவையில் மூவர்ணக் கொடி பறப்பது எனக்கு பெருமிதமான ஒன்று. பா.ஜ.க.வின் பலத்தை குறைக்க எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரங்களை செய்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் சிறந்த அறிவாளிகள்- எதிர்க்கட்சியினரின் பொய்ப்புரட்டுகள் மக்களிடம் எடுபடாது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டு அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.