புதுக்கோட்டை
தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
|‘நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
உண்ணாவிரதம்
'நீட்' தேர்வை ரத்து செய்ய கோரி, மத்திய அரசு, தமிழக கவர்னரை கண்டித்தும் புதுக்கோட்டையில் திலகர் திடலில் தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார்.
உண்ணாவிரதத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:- சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தமிழகத்தில் தான் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் இன்று 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக கொண்டு வரப்பட்ட 'நீட்' தேர்வால் தமிழக மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
போராட்டம் வெற்றி பெறும்
தமிழக மாணவர்களின் மருத்துவராக வேண்டிய கனவு சிதைந்து போய் உள்ளது. அதனால் வெளிநாடுகளில் சென்று மாணவர்கள் படிக்க வேண்டிய சூழல் உள்ளது. 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெறுகிற இந்த போராட்டம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த உண்ணாவிரதத்தில் அப்துல்லா எம்.பி. பேசுகையில், "தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக தி.மு.க. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. வரக்கூடிய 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அவரே பிரதமராக இருந்து கையொப்பமிட்டு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பார்'' என்றார்.
சட்ட மசோதா
உண்ணாவிரதத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முடித்து வைத்து பேசுகையில், " தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டும் என பா.ஜ.க.வை தவிர யாரும் சொல்வதில்லை. நீட் தேர்வு தேவையில்லை என்பதற்காக தான் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மத்திய அரசின் அமைச்சகங்கள் சில விளக்கங்களை கேட்டுள்ளது. அந்த சட்டமசோதாவை யாரும் மறுக்கவில்லை.
கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு சட்டத்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து பதில்களை அனுப்பி உள்ளோம். விளக்கங்களை மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் விலக்கு தந்தாக வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் வருகிற ஆட்சி நிச்சயமாக நல்ல பலன்களை தரும். நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தர வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம்'' என்றார்.
கருப்பு மை
உண்ணாவிரதத்தில் முத்துராஜா எம்.எல்.ஏ., மாநில மருத்துவர் அணி அமைப்பாளர் அண்ணாமலை ரகுபதி, தி.மு.க. நகர செயலாளர் செந்தில், இளைஞர் அணி அமைப்பாளர்கள் சண்முகம், மணிராஜன், மாணவர் அணி அமைப்பாளர்கள் இளையசூரியன், கலைச்செல்வன், மருத்துவர் அணி அமைப்பாளர்கள் முத்துக்கருப்பன், சுதர்சன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் எல்.இ.டி. திரையில், 'நீட்' தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் பற்றிய தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. நீட் என எழுதப்பட்ட பதாகையில் கருப்பு மை பூசி அழித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அனைவருக்கும் குளிர்பானம் கொடுக்கப்பட்டு உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.