திருப்பத்தூர்
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குடிபோதையில் புகுந்து தி.மு.க. பிரமுகர் ரகளை
|வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குடிபோதையில் புகுந்த தி.மு.க. பிரமுகர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி,
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குடிபோதையில் புகுந்த தி.மு.க. பிரமுகர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்
மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது. இது தொடர்பாக வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பணியாளர்களுக்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவர், நான் ஜாதி சங்கத் தலைவன், இந்த சாரதி, ஜாதி பிரச்சினையை ஏற்படுத்துகிறான் என பேசினார். அப்போது அவரை வெளியேறுங்கள் என்று அலுவலக உதவியாளர் கூறினார். ஆனால் அவரை மிரட்டும் தோரணையில் சைகை செய்தார்.
அவரிடம், கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. நீங்கள் வெளியே காத்திருங்கள் என்று அலுவலக பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த நபர் நீதானே ஆணையாளர், எனக்கூறி மரியாதை இல்லாமல் பேசி கூட்டம் முடியும் வரை காத்திருக்கிறேன் என தெரிவித்து வெளியே சென்றார்.
மது அருந்திவிட்டு...
இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு வாணியம்பாடி நகர் போலீசார் விசாரணை நடத்தியதில் நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டிய நபர் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த வி.ஸ்ரீதர் என்பதும் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.மீனவரணி அமைப்பாளர் என்பது தெரியவந்தது. இவர் அலுவலகத்திற்குள் மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்துள்ளார். எனவே இவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஆணையாளர் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மேலும் நகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த ஆம்பூர் பேட்டையை சேர்ந்த அண்ணாமலை, பெருமாள்பேட்டை சேர்ந்த குணசேகரன் ஆகிய இருவரிடமும் ஸ்ரீதர் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களும் ஸ்ரீதர் மீது தனித்தனியாக நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தி.மு.க.வினர் திரண்டனர்
இதனிடையே பிரச்சினை தொடர்பாக மாவட்ட தி.மு.க. மீனவர் அணி அமைப்பாளர் வி.ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திடீரென நகர போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.