வரும் 5 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
|கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறலாம் எனத் தெரிகிறது.
சென்னை,
வரும் 5 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்- அமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
அதுமட்டும் இன்றி, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுகவின் தேர்தல் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்டா மாவட்டத்தை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அடுத்தபடியாக தென் மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தேர்தலுக்கு நிர்வாகிகளை தயார்படுத்துவது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம்? என்பது பற்றியும் திமுக ஆலோசித்து வரும் நிலையில், 5 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.