தி.மு.க. கவுன்சிலரின் தந்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை - திண்டுக்கல்லில் பயங்கரம்
|திண்டுக்கல்லில் தி.மு.க. கவுன்சிலரின் தந்தையை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சியின் 25-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் சிவக்குமார். இவரது தந்தை நாகராஜ். இவர் மார்க்கெட்டில் இருந்து பாறைப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மர்ம கும்பல் நாகராஜ் மீது மிளகாய் பொடி தூவி உள்ளனர்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் எழுந்து ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி நாகராஜை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சிலர் அந்த பகுதியை விட்டு ஓடினார்கள்.
இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தி.மு.க. கவுன்சிலரின் தந்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.