தி.மு.க.வும், காங்கிரசும் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன - பா.ஜனதா தேசிய தலைவர்
|தி.மு.க.வும், காங்கிரசும் குடும்ப அரசியலுக்குதான் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று காரமடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.
பொதுக்கூட்டம்
2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக பா.ஜனதா தற்போது இருந்தே பணிகளை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே தென்திருப்பதி நால் ரோடு சந்திப்பில் உள்ள மைதானத்தில் கோவை, நீலகிரி பாராளுமன்ற தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் மாலை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னேற்ற பாதை
பிரதமர் மோடி நாட்டை முன்னேற்றமான பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் பிரதமர் மோடியின் செயல்திறமையை வியந்து பார்க்கின்றன. கொரோனா பாதிப்பை சமாளித்தது, உக்ரைன் போர் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும் அனைத்தையும் சிறப்பாக கையாண்டு நாட்டு மக்களை பிரதமர் மோடி காப்பாற்றி வருகிறார். மருந்து உற்பத்தியில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளோம். ஏற்றுமதியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.
தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். ராணுவ ஆயுத தளவாடம் தயாரிக்க அதிக நிதி ஒதுக்கி வருகிறோம். தமிழ்மொழிக்கு செம்மொழி ஆய்வுக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளோம்.
குடும்ப அரசியலில் கவனம்
தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி நடக்கிறது. நாங்கள் நாட்டை பாதுகாக்கிறோம். அவர்கள் குடும்பத்தை மட்டுமே பாதுகாக்கிறார்கள். பா.ஜனதாவுக்கு நாடுதான் முதலில். கட்சி இரண்டாவது தான். ஆனால் தி.மு.க.வுக்கு குடும்பம்தான் முதலில், கட்சி இரண்டாவது தான். நாடு கடைசியில்தான்.
முன்னாள் பிரதமர் நேரு காஷ்மீர் மாநிலத்துக்காக தனி அதிகார அந்தஸ்தை கொண்டு வந்து அந்த மாநிலத்தை மட்டும் பிரித்தார். பிரதமர் மோடி அந்த அதிகாரத்தை ரத்து செய்து நாட்டை வலிமையாக்கியுள்ளார். ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துகிறார். அதில் ஒற்றுமை இல்லை. நாட்டை பிளவு படுத்தும் சக்திகள் தான் அதில் கலந்துகொண்டுள்ளனர். தி.மு.க.வும், காங்கிரசும் குடும்ப அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
பா.ஜனதாவை வெற்றிபெற செய்யுங்கள்
தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, மக்கள் நலன் பெற வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். நான் மீண்டும் வரும்போது நீலகிரியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று தாமரை மலர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்ஏ., மகளிா் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., எச்.ராஜா, மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை முடித்துக்கொண்டு ஜே.பி.நட்டா அன்னூர் நல்லிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மூர்த்தி என்பவரின் வீட்டில் தேனீர் அருந்தினார். பின்னர் அங்கு இருந்து கார் மூலம் கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்றார். அங்கு இரவில் தங்கினார். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில ஈஷா யோகா மையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமானநிலையம் சென்று அங்கு இருந்து 10.35 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார்.