தி.மு.க.- பா.ஜ.க.வினர் வதந்தியை பரப்புகிறார்கள்: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
|சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார்.
கோவை,
கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது,
யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. சாதாரண தொண்டர்களுக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர் என மிகப்பெரிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அந்த வகையில் ஒன்றிய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக உயர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்.
சமூக வலைதளங்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பலர், பா.ஜ.கவுக்கு செல்வதாக தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு சேர்ந்து கொண்டு வதந்தியை பரப்பி வருகின்றனர். அதனையெல்லாம் நான் பார்ப்பதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. அதனை பற்றி பேசினால் நமக்குதான் நேரம் விரயமாகும். வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் வைத்துள்ள பா.ஜ.கவில் நாம் சேரப் போகிறோம் என்று கூறினால் அதற்கு நாம் பதில் கூற வேண்டுமா? தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க.. தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஒன்று சேருமா? பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்று சேருமா? அது போலதான் நம்மை பற்றி பரப்பப்படும் வதந்தியும்.
அதனால் அதனை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் அப்படியே விட்டு விடுங்கள். நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். என தெரிவித்தார்.