தி.மு.க.-பா.ஜனதாவின் ரகசிய உறவு அம்பலமானது; அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
|மத்திய நிபுணர் குழுவினரை போலீசார் மூலம் பொதுமக்களை சந்திக்க விடாமல் தி.மு.க. அரசு தடுத்துள்ளது என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகிற 24-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அன்றைய தினம் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. உறுதிமொழியும் ஏற்கப்படும். இதில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இப்போது வெளியிட்டுள்ள அரசாணையில் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மழைவெள்ளம் வந்தபோது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி உள்ளது. தேர்தல் வாக்குறுதியிலும் அறிவித்தது ஒன்று, செய்தது ஒன்று என ஏமாற்றினார்கள்.
மழை வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட வந்த மத்திய நிபுணர் குழுவினர் தமிழக அரசை பாராட்டியதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் மத்திய நிபுணர் குழுவினரை போலீசார் மூலம் பொதுமக்களை சந்திக்க விடாமல் தி.மு.க. அரசு தடுத்துள்ளது. மக்களை சந்தித்தால்தான் உண்மையான நிலவரம் தெரிய வரும்.ஆனால் மக்களை சந்திக்காமல் வெள்ள மீட்பு பணியில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று மத்திய நிபுணர் குழுவினர் பாராட்டி உள்ளனர். இதன்மூலம் தி.மு.க.-பா.ஜனதா இடையே உள்ள ரகசிய உறவு அம்பலமாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.