< Back
மாநில செய்திகள்
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தும் தி.மு.க. கூட்டணி
மாநில செய்திகள்

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தும் தி.மு.க. கூட்டணி

தினத்தந்தி
|
2 March 2024 11:18 AM IST

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.விடம் விடுதலை சிறுத்தைகள் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி இன்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. தி.மு.க. தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி ஒதுக்கும்படி மனிதநேய மக்கள் கட்சி கேட்டுள்ளது.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் 4 முதல் 5 தொகுதிகள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் அல்லாமல் தனிச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுடனான தொகுதி பங்கீடு இறுதியான உடன் அடுத்தகட்டமாக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகளால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்