மதுரை
தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
|திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார்(தி.மு.க.) தலைமையில் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் சில நிமிடத்தில் 32 தீர்மானங்கள் வாசித்து முடிக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் நகராட்சியின் அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறினார். அதன்பிறகு நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னச்சாமி ஆகியோர் கூட்டத்தை நிறைவு செய்வதாக கூறி புறப்பட்டு சென்றனர்.
இதற்கு 11 தி.மு.க. கவுன்சிலர்கள் 6 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நகர் மன்ற தலைவர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய பஸ் நிலைய திட்டம் நிராகரிப்பு
கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதாவது:-
திருமங்கலம் நகராட்சியில் எந்த திட்டப் பணிகளும் சரிவர நடைபெறவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதைய நகராட்சி நிர்வாகம் புதிய பஸ் நிலையத்திற்கான இடத்தை நிராகரித்துவிட்டு ஏற்கனவே உள்ள பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பஸ்கள் செல்ல இடையூறு அதிகமாக இருக்கும் நிலையில் மீண்டும் அதே இடத்தில் பஸ் நிலைய விரிவாக்கம் செய்தால் கூடுதலாக இட நெருக்கடி ஏற்படும். பொதுமக்களின் பிரச்சினையை எடுத்துக் கூறினால் நகராட்சி தலைவரோ அல்லது அதிகாரிகளோ கண்டு கொள்வதில்லை. மக்களின் அடிப்படை தேவைகளை கூட நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற தயாராகவில்லை. இது குறித்து கேள்வி எழுப்ப முற்பட்டபோது நகரத்தலைவர், துணைத்தலைவர் கூட்டம் நிறைவு பெற்றதாக கூறிவிட்டு எழுந்து சென்று விட்டனர் என குற்றம் சாட்டினர்.
லஞ்சம் கேட்பதாக புகார்
தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதாவது:-
திருமங்கலம் நகர மன்றத்தில் மொத்தம் 20 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 15 கவுன்சிலர்களின் வார்டுகளில் எந்த அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை. நகராட்சி நகர அமைப்பு அலுவலர் திருமங்கலம் நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு முறையாக அங்கீகார கடிதம் வழங்காமல் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும், கேட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே வீட்டு மனைக்கான அங்கீகாரம் வழங்குவதாகவும், இது குறித்து நகர்மன்ற தலைவரிடமும் நகராட்சி அதிகாரிகளும் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. இது குறித்து நகராட்சி கூட்டத்தில் பேச முடிவு செய்த போது நகர மன்ற தலைவரும் துணைத்தலைவரும் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி வெளியே சென்று விட்டனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என நாங்கள் 11 பேரும் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்து உள்ேளாம் என்றனர்