< Back
மாநில செய்திகள்
தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
சேலம்
மாநில செய்திகள்

தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்

தினத்தந்தி
|
28 Feb 2023 7:30 PM GMT

தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறப்பு தீர்மானம்

சேலம் மாநகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் ஜெயக்குமார் எழுந்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நாளை (அதாவது இன்று) கொண்டாடப்படுகிறது. எனவே மாநகராட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதையடுத்து மேயர் ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதிக நிதி பெற வேண்டும்

ெதாடர்ந்து கவுன்சிலர் தெய்வலிங்கம் பேசுகையில், மண் சாலைகள், தார் சாலைகளாக மாற்றும் திட்டத்தின்கீழ் 15 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க ரூ.10 கோடி மட்டும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு மண்டலத்திற்கு 3½ கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க ரூ.2 கோடி போதுமானதாக இல்லை. குறைந்தது ரூ.5 கோடி தேவை. அதேபோன்று 5 வருடத்திற்கு மேல் ஆகி பழுதான சாலைகளை புதுப்பிக்க மாநகராட்சியில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், அதன்படி ஒரு மண்டலத்திற்கு 7½ கிலோ மீட்டர் பழுதான சாலை சீரமைக்க ரூ.2 கோடியே 7 லட்சம் தான் ஒதுக்கப்படுகிறது. இதுபோதாது. இதற்கும் ஒரு மண்டலத்திற்கு குறைந்தது ரூ.5 கோடி தேவைப்படும். சாலைகளின் பழுதுகளுக்கு ஏற்றால் போல் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர, ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்றாற்போல் சாலை அமைப்பது தவறானது. எனவே அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி இந்த திட்டத்திற்கு அதிக நிதி பெற வேண்டும் என்றார்..

தி.மு.க.- அ.தி.மு.க. வாக்குவாதம்

அ.தி.மு.க. கொறடா செல்வராஜ் பேசும் போது, 15-வது நிதிக்குழுவின்படி மத்திய அரசு வழங்கும் நிதியை இன்னும் பெற முடியவில்லை என்றார். அதற்கு, இந்த மாதம் 31-ந் தேதிக்குள் நிதி பெறப்படும் என்று அதிகாரி பதில் அளித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி எழுந்து நின்று, மாநகராட்சியில் அ.தி.மு.க. உறுப்பினர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திட்டப்பணிகள் நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர் சாந்தமூர்த்தி எழுந்து பேச முயன்றார். அதற்கு யாதவமூர்த்தி, நான் கேட்கும் கேள்விகளுக்கு மேயர் அல்லது அதிகாரிகள் பதில் அளிக்கட்டும். நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு கவுன்சிலர் சாந்தமூர்த்தி, தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என்று மேயர் பாகுபாடு பார்ப்பது இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் கவுன்சிலர்களிடம் கேட்டு தான் மேயர் முடிவு எடுக்கிறார் என்று கூறினார். அப்போது தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை மேயர் சமாதானம் செய்தார்.

சிறப்பான பணிகள்

பின்னர் மேயர் ராமச்சந்திரன் பேசும் போது, 60 வார்டுகளிலும் சிறப்பான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த நிமிடத்தில் அழைத்தாலும் வார்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவர்களது அடிப்படை பிரச்சினையை தீர்க்க வருவேன் என்றார்.

தொடர்ந்து கவுன்சிலர் ஈசன் இளங்கோ பேசுகையில், சேலம் பழைய பஸ் நிலையத்தில் ஈரடுக்கு பஸ் நிலையத்துக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்றார்.

அ.தி.மு.க. கொறடா செல்வராஜ், வார்டு வரையறையில் குளறுபடிகள் உள்ளன என்றார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி எழுந்து வார்டு வரையறுக்கப்பட்டு, தெருக்கள், எல்லை பிரச்சினைகள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுதான் முடிவு எடுக்கப்பட்டன. தற்போது அதில் குளறுபடி இருக்கிறது என்று உறுப்பினர் கூறியுள்ளார். எனவே இதற்கு ஒரு குழு அமைத்து, குளறுபடி இருந்தால் 10 நாட்களில் சரி செய்யப்படும் என்று பதில் அளித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.0 வார்டுகளிலும் பணிகள் நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும் செய்திகள்