கன்னியாகுமரி
சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர்
|திருப்பதிசாரத்தில் கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி:
திருப்பதிசாரத்தில் கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
முற்றுகை போராட்டம்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து குமரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நாகர்கோவில் திருப்பதிசாரம் பகுதியில் உள்ள 4 வழி சாலை சுங்கச்சாவடி முன்பு மாவட்ட தலைவர் அமுதன் தலைமையில் தே.மு.தி.க.வினர் பலர் குவிந்தனர். மாநகர செயலாளர் இந்தியன் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
அவர்கள் கட்டண உயர்வை குறைக்க கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். அத்துடன் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஐடன் சோனி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
43 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மாவட்ட தலைவர் அமுதன் மற்றும் 7 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சகாய நகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தால் திருப்பதிசாரம் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.