ஈரோடு
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது; பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
|தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
ஈரோடு
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
வேலை இழப்பு
தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் சிறப்பாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் நூல் விலை, பருத்தி விலை உயர்வு காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 6 மாவட்டங்களில் பொரும்பாலான நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேர்முகமாகவும், மறை முகமாகவும் பல கோடிபேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் படுகொலை சம்பவம் நடைபெறுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். விசாரணை கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. பட்டப்பகலில் பெண்கள் பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு அதிகமாக நடைபெறுகிறது. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக தமிழக போலீஸ்துறை பேசப்பட்டது. ஆனால் இன்று அது ஏவல் துறையாக மாறி உள்ளது. இது மாற வேண்டும்.
அம்மா உணவகம்
திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. எதுக்காக அந்த வார்த்தைகளை சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. மாடல் மாடல் என்றுதான் சொல்கிறார்கள் எந்த மாடலும் நடைபெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுப்பதாக சொன்னார்கள். நீட் தேர்வை உடனடியாக ஒழிப்போம் என்று கூறினார்கள். எந்த விலைவாசி உயர்வும் இருக்காது என்றார்கள். அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். எல்லா இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றார்கள் இதே மாதிரி நிறைய கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் இதுவரை எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
எனவே தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும். அம்மா உணவகம் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். அந்தத் திட்டத்தை தொடர வேண்டும். பிரதமர் வந்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. அதனால் ஆட்சி நடத்துவது கஷ்டமாக உள்ளது என்கிறார். இதற்கு யார் காரணம் என்றுதான் நான் கேட்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.