விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் தே.மு.தி.க. மனு
|விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் தே.மு.தி.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனிடையே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டுள்ளார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம். மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தே.மு.தி.க. தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வின் டெல்லி மாநில தலைவர் நாகராஜன் புகார் மனுவை அளித்துள்ளார். அதில், விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதே போல் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அலுவலகத்தில், தே.மு.தி.க. வழக்கறிஞர் ஜனார்த்தனன் மனு அளித்தார். அந்த மனுவில் தேர்தல் நடத்தை விதி 63-ன் படி விருதுநகர் தேர்தல் முடிவை நிறுத்தி வைத்து முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.