கன்னியாகுமரி
பஸ் டிரைவரை தாக்கிய தே.மு.தி.க.நிர்வாகி தலைமறைவு
|ஆற்றூரில் பஸ் டிரைவரை தாக்கிய தே.மு.தி.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
திருவட்டார்,
ஆற்றூரில் பஸ் டிரைவரை தாக்கிய தே.மு.தி.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
டிரைவர் மீது தாக்குதல்
திருவட்டார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் ஒரு பஸ் நேற்றுமுன்தினம் மாலை மார்த்தாண்டத்தில் இருந்து அஞ்சு கண்டறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவட்டாரை சேர்ந்த டிரைவர் பத்மகுமார் (வயது 52) ஓட்டினார். ஆற்றூர் மங்களாநடைக்கு சென்ற போது எதிரே மற்றொரு பஸ் வந்தது. இந்தநிலையில் 2 பஸ்களுக்கு இடையே மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்றார்.
அந்த சமயத்தில் ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்ட அந்த நபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பொருட்கள் கீழே விழுந்தது. இதனை டிரைவர் பத்மகுமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் டிரைவர் பத்மகுமாரை திடீரென தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.
டிரைவர்கள் போராட்டம்
இதுபற்றி தகவல் அறிந்த மற்ற பஸ் டிரைவர்கள் ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பஸ்களில் சென்ற பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த பரபரப்புக்கு இடையே திருவட்டார் பணிமனை கிளை மேலாளர் அனீஷ், திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் டிரைவரை தாக்கிய நபர் திருவரம்பை அடுத்த புளிச்சிமாவிளையைச் சேர்ந்த செல்வன் என்பதும், அவர் தே.மு.தி.க. நிர்வாகி என்பதும் தெரிய வந்தது. மேலும் செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெற்று பஸ்சை இயக்கினர். போக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் ¾ மணி நேரம் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
இரவிலும் நீடித்தது
இதற்கிடையே இரவு 10 மணி ஆகியும் டிரைவரை தாக்கிய செல்வன் மீது நடவடிக்ைக எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்த போக்குவரத்து ஊழியர்கள் திருவட்டார் பணிமனையில் ஒன்று கூடி பஸ்களை உள்ளே சென்று நிறுத்தாமல் வாசலிலேயே நிறுத்தினர். இதனால் இரவிலும் பரபரப்பு நிலவியது.
பிறகு திருவட்டார் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் செல்வன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் போலீசார் தேடுவதை அறிந்த செல்வன் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.