தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு - சுமார் 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
|ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்றது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று(12-ந்தேதி) முதல் தொடங்கியது. இன்று முன்பதிவு செய்தால் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதி(நாளை) முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில், பெரும்பாலான டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தது. கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க அடுத்து வரும் நாட்களில் பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.