நெல்லையில் களைகட்டும் தீபாவளி விற்பனை - 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு
|நெல்லை டவுனுக்கு வரக்கூடிய அனைத்து சாலைகளும் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.
நெல்லை,
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இறுதிகட்ட பண்டிகைக்கால விற்பனை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் டவுன் பகுதியில் உள்ள நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நெல்லை டவுன் பகுதியில் அதிக அளவில் ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இருப்பதால், சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் அங்கு குவிந்து வருகின்றனர். ரத வீதிகளில் சுமார் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து மக்கள் கூட்டத்தை சரிசெய்து வருகின்றனர். நெல்லை டவுனுக்கு வரக்கூடிய அனைத்து சாலைகளும் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதே போல் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு பணிகளில் சுமார் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக நெல்லையில் பரவலான மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் விற்பனை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.