< Back
மாநில செய்திகள்
சேலத்தில் களைகட்டியது தீபாவளி பண்டிகை
சேலம்
மாநில செய்திகள்

சேலத்தில் களைகட்டியது தீபாவளி பண்டிகை

தினத்தந்தி
|
20 Oct 2022 1:00 AM IST

தீபாவளி விற்பனை களைகட்டியதால் சேலம் கடைவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி விற்பனை களைகட்டியதால் சேலம் கடைவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதனால் பொதுமக்கள் புத்தாடைகள் எடுப்பதற்கு குடும்பத்துடன் நகரங்களில் உள்ள ஜவுளி கடைகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். இதன்காரணமாக அனைத்து ஜவுளி கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

சேலம் மாநகரில் கடைவீதியில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஜவுளி கடைளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக நேற்று கடைவீதிக்கு வந்திருந்தனர். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையோர தற்காலிக கடைகளிலும் ஜவுளி விற்பனை மும்முரமாக நடந்தது.

போலீசார் கண்காணிப்பு

இதேபோல், புதிய பஸ்நிலையம், சுவர்ணபுரி, அழகாபுரம், குகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்தது. கடைவீதி, 5 ரோடு, அழகாபுரம், குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதுதவிர, தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வரும் நாட்களில் கடைவீதிக்கு மேலும் அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம், சேலம் மாநகரில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசு கடைகளிலும் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றதை காணமுடிந்தது.

மேலும் செய்திகள்