தீபாவளி பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து
|உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், பட்டாசுகளை வாங்க உறுதிமொழி எடுப்போம் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி(நாளை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் உற்சாகத்தோடு பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழில் பேசி காணொலி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
"பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா, அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீதான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' அல்லது 'வசுதைவ குடும்பகம்' என்ற நமது சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடு இது.
உலகெங்கிலும் உள்ள பாரதவாசிகள் மதம், மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகளை வாங்க நாம் உறுதிமொழி எடுப்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள்."
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.