நாமக்கல்
இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?
|இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்? என நாமக்கல் மாவட்ட சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோவப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.
சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர். சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.
அன்பு மறைகிறது
ராசிபுரம் வக்கீல் குமார் கூறியதாவது:-
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லாததே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு இடையே போதுமான கலந்துரையாடல் கூட இல்லாத நிலை நிலவுகிறது. அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு மறைந்து போகிறது.
அதனால் ஏதேனும் ஒரு விவாதத்தில் அவர்கள் குடும்பத்தை மறந்து கடுஞ்சொற்களை பயன்படுத்தி விடுகின்றனர். மேலும் அதை அப்போதே வெளிப்படையாக பேசி முடிக்காமல், மனதில் வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிர் போக்கை கடைபிடிப்பதால் குடும்பத்தில் விரிசல் அதிகரிக்கிறது. இத்தகைய சிறு சிறு பிரச்சனைகளால் விவாகரத்துகள் ஏற்படுகின்றன.
அவற்றை தவிர்க்க குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் வேலைக்கு செல்ல வேண்டும். கணவன் வேலைக்கு சென்றால் மனைவியும், மனைவி வேலைக்கு சென்றால் கணவனும் குடும்பத்தை முழுமையாக கவனித்து அனுசரணையாக நடக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். தான் செய்யும் தவறை ஏற்றுக் கொண்டு தயக்கமின்றி மன்னிப்பு கேட்டுவிட்டால் வாழ்வு மேம்படும்.
ஈகோ பார்க்க கூடாது
என்.புதுப்பட்டியை சேர்ந்த தாமரைச்செல்வன்:-
முன்பெல்லாம் கணவன் மற்றும் குழந்தைகள் என குறுகிய வட்டத்திற்குள் தனது வாழ்க்கையை வைத்திருக்கும் இல்லத்தரசிகள் அதிகமாக இருப்பார்கள். குடும்பத்தின் மேம்பாட்டிற்கு இல்லத்தரசிகளின் முக்கியமாக இருக்கும்.அதற்கு பெண்களுக்கான கல்வி குறைந்த அளவில் இருந்தது காரணமாக அமைந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கல்வியில் சாதிக்காத பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதன் மூலம் ஏராளமான பெண்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளாகவும், சாப்ட்வேர் என்ஜினீயர்கள் திகழ்கின்றனர்.
கல்வியில் சாதித்து பெண்கள் நல்ல நிலையில் இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். அதனால் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வது அதிகரித்து உள்ளது. அது குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பொருளாதாரம் மேம்படுத்த உதவுகிறது.
ஆனால் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் குறைந்து வருகிறது. வெளி ஆட்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்தினருக்கு அளிக்க இருபாலரும் தவறுகின்றனர். அது தவறு என்பதை உணருவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. பின்னர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு கோபத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அது மனதளவில் பெரிய காயத்தை ஏற்படுத்தும். ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை அதிகரிக்கச் செய்யும். இதன் எதிரொலியாகவே விவாகரத்துகள் அதிகரிக்கின்றன. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் விவாகரத்துகள் தவிர்க்கப்படும். கணவன், மனைவிக்குள் ஈகோ பார்க்க கூடாது. வீட்டுக்கு வந்து விட்டால் அலுவலகத்தைப் பற்றி சிந்திக்காமல், முழுமையாக குடும்பத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்திற்கான சிந்தனை மேலோங்கும். பிரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.
மனம் புண்படும்
மனநல சமூகப் பணியாளர் மற்றும் ஆலோசகர் ரமேஷ்:-
தற்போது இளம் தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிக்க புரிதல் இல்லாதது காரணமாக உள்ளது. குடிப்பழக்கமும் அதற்கு பிரதான காரணமாக உள்ளது. முன்பெல்லாம் முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள்.கணவன்மார்கள் குடித்துவிட்டு வர தயங்குவார்கள். மேலும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சரி செய்து விடுவார்கள்.
தற்போது தனித்தனி குடும்பங்களாக இருப்பதால், கணவன் குடித்துவிட்டு, மனைவியின் மனம் புண்படும் வகையில் பேசுவது சாதாரணமாகிவிட்டது. மேலும் தனக்காக வாழும் மனைவியின் மீது நம்பிக்கை இல்லாமல் சந்தேகிப்பது, அவர்களின் மனதை மேலும் காயப்படுத்தும். குறிப்பாக ஈகோ பிரச்சனை மற்றும் அதீத இணையதள பயன்பாடு ஆகியவற்றால் அதிக அளவில் குடும்ப பிரச்சினைகள் வருகிறது. அதனால் சிறிய குடும்பப் பிரச்சனை கூட விவாகரத்தில் முடியும் நிலை உருவாகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண சிந்திக்க வேண்டும். தொடர்ந்து பிரச்சனையை பெரிதுபடுத்தும் வகையில் சண்டை போட்டுக் கொள்ளாமல், இருவரும் அவரவர் தவறை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் விவாகரத்தை தவிர்க்க முடியும்.
சுய ஒழுக்கம்
திருச்செங்கோட்டை சேர்ந்த வடிவேல் முருகன்:-
இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் பாதிப்படையும். மேலும் அதனால் இல்லற வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதை உணராமல் குடிப்பழக்கத்தை வாடிக்கையாக இளைஞர்கள் வைத்துள்ளனர்.
அதன் எதிரொலியாக திருமணத்திற்கு பின்பு, எதற்கெடுத்தாலும் மனைவிடம் கோபப்படுவது, சண்டை போடுவது, தவறாக பேசுவது வாடிக்கையாகி விடுகிறது. அதனால் மனைவிக்கு கணவனின் அன்பு கிடைப்பதில்லை. மனைவிக்கும் கணவன் மீது காதல் இல்லாமல் போகிறது. அதன் காரணமாக விவாகரத்துகள் அதிகரிக்கின்றன. எனவே சுய ஒழுக்கத்தை இளைஞர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து சூழலிலும் நிதானத்துடன் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும். அரசு போதைப் பொருட்கள் விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும். அதன் மூலம் விவாகரத்துகள் குறைவதோடு, ஏராளமான குடும்ப வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
செங்கப்பள்ளியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-
தற்போதைய கால சூழலில் விவாகரத்துகள் அதிகரிக்க பெண்களின் ஈகோ முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக கணவனின் பெற்றோருக்கு உரிய மரியாதையை தருவதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. அதற்கு அவர்களை சிறு வயதில் இருந்து, நல்லது கெட்டதை சொல்லி வளக்காததே முக்கிய காரணமாக உள்ளது.
அதாவது கணவனின் பெற்றோரை தன் பெற்றோராக நினைக்கும் மனநிலை அவர்களுக்கு வருவதில்லை. அதனால் கணவன் எது சொன்னாலும், அது தவறுதான் என்ற மனநிலையிலேயே பிடிவாதமாக செயல்படுகின்றனர். அதனால் குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே விரிசல் அதிகரிக்கிறது. அதோடு தவறான உணவு பழக்கங்கள் மலட்டுத்தன்மையை உருவாக்குகிறது. அதனால் குழந்தையின்மை ஏற்பட்டும் விவாகரத்தாகிறது. எனவே சிறுவயதில் இருந்து உணவு பழக்கங்களை சரியாக கடைபிடிக்க பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் அன்பு செலுத்தவும், உறவை மதித்து நடக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் விவாகரத்து எண்ணம் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவாகரத்து கோருவதற்கான காரணங்கள் வருமாறு:-
1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.
3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.
4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.
13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.