சென்னை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம் தொடா்பான மாவட்ட பணிக்குழு கூட்டம்
|சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற உள்ள இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் தொடர்பான மாவட்ட பணிக்குழு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
அப்போது, அதற்கான செயல்பாட்டு வழிமுறை கையேட்டினை வெளியிட்டு மேயர் பிரியா கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் முதல் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. அடுத்த கட்டமாக மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 3 தவணையாக தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி முதல் தவணை 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும், 2-வது தவணை 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும், 3-வது தவணை 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.
இந்த தடுப்பூசி முகாம்களில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணிபுரிவார்கள். தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தட்டம்மை, தொண்டை அடைப்பான் போன்ற நோயிலிருந்து குழந்தைகளை காக்க முடியும். எனவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜி மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்கள், கூடுதல் மாநகர அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.