தி.மு.க.வில் மாவட்ட வாரியாக சட்டமன்ற தொகுதிகள் - துரைமுருகன் அறிவிப்பு
|தி.மு.க.வில் மாவட்ட வாரியாக சட்டமன்ற தொகுதிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் கோவை, திருப்பூர், தர்மபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களில் பின்வரும் சட்டமன்ற தொகுதிகள் அடங்கியதாக அமையும். அந்த வகையில், கோவை மாநகர் மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய தொகுதிகளும், கோவை வடக்கு மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவினாசி ஆகிய தொகுதிகளும், கோவை தெற்கு மாவட்டத்தில் சூலூர், கிணத்துகடவு, வால்பாறை (தனி), பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளும் அடங்கும்.
திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளும், திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் உடுமலைபேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய தொகுதிகளும், மதுரை மாநகர் மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளும், தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளும், தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் அரூர் (தனி), பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு ஆகிய தொகுதிகளும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.