கோயம்புத்தூர்
மனித உடல் கிடந்த இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
|காரமடை அருகே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் கிடந்த இடத்தில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். மேலும், இந்த வழக்கில் துப்பு துலக்க 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
காரமடை அருகே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் கிடந்த இடத்தில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். மேலும், இந்த வழக்கில் துப்பு துலக்க 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
ஆணா, பெண்ணா?
கோவை மாவட்டம் காரமடை அருகே தேவனாபுரத்தில் சுப்பம்மாள் என்பவரது தோட்டம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கருப்புசாமி என்பவர் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது ஓரிடத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. உடனே அங்கு சென்று கருப்புசாமி பார்த்தார். அப்போது அழுகிய நிலையில் மனித உடல் கிடந்தது. இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு மேட்டுப்பாளையம் துணை சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
5 தனிப்படைகள்
அப்போது துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் அழுகி கிடப்பது தெரியவந்தது. அது ஆணா அல்லது பெண்ணா? என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் தேவனாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் யாராவது காணாமல் போயுள்ளார்களா? என்று விசாரிக்க போலீசாரை அறிவுறுத்தினார். மேலும், இந்த வழக்கில் துப்பு துலக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
நரபலி?
அதன்படி தனிப்படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது விசாரணையின் முடிவில், பிணமாக கிடப்பது யார்? என்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் எப்படி இறந்தார்?, கொலை செய்யப்பட்டாரா? அல்லது நரபலி கொடுக்கப்பட்டாரா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள்.