விருதுநகர்
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
|விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 3 எம்.பி.க்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 3 எம்.பி.க்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கண்காணிப்பு குழு கூட்டம்
விருதுநகர் கலெக்டா் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன், எம்.பி.க்கள் தனுஷ் குமார், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
காவிரி பிரச்சினை
இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக அரசு ஆணையத்தின் உத்தரவுப்படி தண்ணீரை திறந்து விடும் நிலையில் அங்குள்ள பா.ஜ.க. முன்னாள் முதல்வர்கள், சிலரை தூண்டிவிட்டு பிரச்சினையை பெரிதாக்குகிறார்கள்.
காங்கிரசை பொருத்தமட்டில் மத்திய மந்திரியிடம் தமிழக மக்களின் நலனை காக்க வேண்டும் என ஜோதிமணி எம்.பி. தலைமையில் மனு கொடுத்துள்ளோம். 2 மாநிலங்களிலும் முதல்வர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
பிரதமா் வேட்பாளர்
2016-ல் இருந்து தொடரும் அ.தி.மு.க., பா.ஜனதா உறவு முறிந்து விட்டதாக கூறினாலும் அவர்கள் பிரதமர் வேட்பாளராக மோடியை தான் தெரிவிப்பார்கள். இந்தியா கூட்டணியை பொருத்தமட்டில் பிரதமர் வேட்பாளர் தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தவிர்க்கப்பட வேண்டியவை என கூறி வரும் சீமான் தான், தவிர்க்கப்பட வேண்டியவர்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தேசிய தலைவர் முடிவு செய்வார். விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 சதவீதம் பேர் தொடர்ந்து இணைப்புகள் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்
விருதுநகர் வடமலைகுறிச்சி விலக்கில் சேவை ரோடு, கலெக்டர் அலுவலகம் முன்பு மேம்பாலம் ஆகிய பணிகள் குறித்து விவாதிக்க தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் வராததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சாத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.