கரூர்
மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள்
|டி.என்.பி.எல். விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி டி.என்.பி.எல். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தடகள போட்டியை தொடங்கி வைத்தார். இதில், கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தாந்தோன்றிமலை ஆகிய 5 குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட 850 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மாணவ-மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 3,000 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தட்டி தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் புகழூர் தாசில்தார் முருகன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவன செயல் இயக்குனர் (இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன், முதுநிலை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.