புதுக்கோட்டை
நிதியியல் கல்வி பற்றிய மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி
|நிதியியல் கல்வி பற்றிய மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நிதியியல் கல்வி பற்றிய மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி புதுக்கோட்டை திலகர் திடல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை முன்னோடி வங்கியின் மேலாளர் எம்.ஆனந்த் தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் பேசினர். போட்டியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிய அளவில் கலந்து கொண்டு அதிலிருந்து 13 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் முதலிடம் பிடித்த 2 மாணவர்களை உள்ளடக்கிய குழுவினர் கலந்து கொண்டனர். போட்டியினை இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியாளர் ஹரிகரன் நடத்தினார். போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடந்தது. முதல் சுற்றில் 13 குழுக்களில் இருந்து எழுத்து தேர்வின் அடிப்படையில் 6 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் 5 உள் சுற்றுகளாக போட்டியானது கேள்வி, காட்சி முறையில் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அட்சயன், ஹர்சவர்தன் ஆகியோரை கொண்ட குழு முதலிடத்தையும், பொன்புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நித்யஸ்ரீ, சவுமியா ஆகியோரை கொண்ட குழுவினர் இரண்டாம் இடத்தினையும், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மணிகண்டன், அருள்முருகன் ஆகியோரை கொண்ட குழுவினர் மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர். ஆகஸ்டு மாதத்தில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அட்சயன், ஹர்சவர்தன் ஆகியோரை கொண்ட குழு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற குழுவுக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்ற குழுவுக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம், மூன்றாம் இடம் பெற்ற குழுவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்த குழுவினருக்கு மாவட்ட கலெக்டரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.