அரியலூர்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
|முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரியலூரில் நாளை தொடங்குகிறது.
கபடி-தடகள போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கீழ்க்காணும் விவரப்படி நடைபெறுகிறது.
அதன்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, மேஜை பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும், 6-ந்தேதி வாலிபால், வளைகோல்பந்து, இறகுபந்து, கால்பந்து ஆகிய போட்டிகளும், 21-ந்தேதி நீச்சல் போட்டியும் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதேபோல் 11-ந்தேதி கிரிக்கெட் போட்டி கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 10-ந்தேதி தடகளம், கபடி, மேஜைபந்து, சிலம்பம், வாலிபால், இறகுபந்து கால்பந்து கூடைப்பந்து ஆகிய போட்டிகளும், 21-ந்தேதி நீச்சல் போட்டியும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. 20-ந்தேதி கிரிக்கெட் போட்டி கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
பொதுப்பிரிவினருக்கு வருகிற 14-ந்தேதி தடகளம், கபடி, சிலம்பம், வாலிபால், இறகுபந்து ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், 24-ந்தேதி கிரிக்கெட் போட்டி ஆண்களுக்கு மட்டும் கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
அரசு ஊழியர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வருகிற 21-ந்தேதி தடகளம், இறகுபந்து, கபடி, எறிபந்து, வாலிபால் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. அரசு ஊழியர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 16-ந்தேதி தடகளம், இறகுபந்து, கபடி ஆகிய போட்டிகளும், வாலிபால் போட்டி ஆண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. 17-ந்தேதி அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடக்கிறது.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வளைகோல்பந்து போட்டிகளும், பொதுப்பிரிவினர் பெண்கள் பிரிவில் கிரிக்கெட் போட்டியும், அரசு ஊழியர்கள் பெண்கள் பிரிவில் வாலிபால் போட்டியும் நேரடியாக மண்டல அளவிலான போட்டிகள் நடைபெறும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மாநில அளவிலான போட்டியில்...
மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் மேற்காணும் விவரப்படி போட்டிகள் நடைபெறும் இடங்களில் காலை 7 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.