திண்டுக்கல்
மாவட்ட அளவிலான செஸ் போட்டி
|திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
உலக செஸ் சங்கம் சார்பில் உலக நாடுகளுக்கிடையேயான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் அகில இந்திய செஸ் சங்கம் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது. போட்டியில் 189 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டியை 3 நாட்கள் நேரில் பார்வையிடும் வாய்ப்பை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீரர், ஒரு வீராங்கனைக்கு வழங்க அகில இந்திய செஸ் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட அளவிலான செஸ் போட்டி, திண்டுக்கல் ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜி.சுந்தரராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். செயலாளர் அப்துல் நாசர், துணை தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதையடுத்து நடந்த செஸ் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 2-வது நாளாக நாளையும் (சனிக்கிழமை) செஸ் போட்டி நடக்கிறது. மாலையில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் போட்டியில் வெற்றி பெறும் ஒரு வீரர், வீராங்கனைக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.