ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சேதத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
|ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சேதத்தை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சேதத்தை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
ஐகோர்ட்டில் மனு
மனித நேய மக்கள் கட்சியின் மாநில வக்கீல் அணிச்செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
ஆர்.எஸ்.மங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக்கட்டிடம் ஆபத்தான நிலையில் மிகவும் சேதமடைந்து உள்ளதாகவும் இப்பகுதியை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், உடல்வலி, பாம்புக்கடி, மகப்பேறு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கட்டிடத்தின் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுவதால் நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவமனைக்கு வர அச்சப்படுகின்றனர்.எனவே, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு பொதுமக்களின் நலன் கருதி புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் என புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் கூறி இருந்தார்.
விசாரணை
இந்த மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அமர்வு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே இந்த நிலையா? இதுபோன்ற கட்டிடங்களில் சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரிகள், டாக்டர்கள் குடியிருப்பார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நீதிபதி ஆய்வு
இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, ஆர்.எஸ்.மங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார். சேதம் அடைந்த கட்டிடங்கள், பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடம் உள்பட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை அனைத்து பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் விரிவான அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுவதாக கூறினார்.
இந்த ஆய்வின் போது மனுதாரர் வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி, ஆர்.எஸ்.மங்கலம் சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமநாதன், ஆர்.எஸ்.மங்கலம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாட்டை திருவாடானை துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பவுல் ஜேசுதாஸ், தனிப்பிரிவு போலீஸ் கலைவாணன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.