திருவண்ணாமலை
குடுகுடுப்பைக்காரர்கள் பகுதியில் உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
|ஆரணியில் குடுகுடுப்பைக்காரர்கள் பகுதியில் சாதி சான்று தொடர்பாக உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர்.
ஆரணி
ஆரணி வி.ஏ.கே.நகர் செல்லும் வழியில் குடுகுடுப்பைகாரர்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் கனிக்கர் என்ற சாதிசான்று கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சாதி சான்று வழங்கவில்லை.
இந்த நிலையில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் குடுகுடுப்பைக்காரர்களின் தலைவர் ஆர்.ராஜாமணி தலைமையில் சாதி சான்று கேட்டு மனு கொடுத்தனர்.
இதையடுத்து அவர் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமியை சந்தித்து சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தார்.
அதன்பேரில் இன்று குடுகுடுப்பைகாரர்கள் வசிக்கும் பகுதிக்கு உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக சென்று விசாரணை செய்தனர்.
அப்போது குடுகுடுப்பைகாரர்கள் எங்கள் சாதியினருக்கு ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனிக்கர் என்று சாதி சான்று வழங்கியுள்ளனர்.
ஆனால் ஆரணியில் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் குழந்தைகள் படிக்க முடியவில்லை. ஆகையால் எங்களுக்கு சாதி சான்று வழங்குங்கள் என்று மனு வழங்கினர்.
இதுகுறித்து குறித்து கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து சென்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
அப்போது நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், வி.தேவராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எ.அசோக்குமார், முன்னாள் அரசு வக்கீல் வி.வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.