காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி - மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
|காஞ்சீபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளையொட்டி, அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000, மற்றும் 1 கிலோ சர்க்கரை மற்றும் பச்சரிசி, முழுக்கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 204 குடும்ப அட்டைதாரர்களுக்கு 635 ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு பெற குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன்களை வழங்கப்பட்ட நிலையில் நேற்று முதல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கள் பொருட்கள் வழங்கும் பணி துவங்கியது.
காஞ்சீபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியான 39-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையில் மொத்தம் 1,056 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் நேற்று மட்டும் 270 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, பொது விநியோக திட்ட துணை பதிவாளர் கி.மணி, மாநகராட்சி 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.அன்பழகன், காஞ்சீபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராமசந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், காஞ்சீபுரம் காந்திநகரில் ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார். இதில் காஞ்சீபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் த.விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.