கள்ளக்குறிச்சி
டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்
|பிரிதிவிமங்கலம் ஊராட்சியில் பிரதான குழாய் உடைந்ததால் டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது
தியாகதுருகம்
பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கரீம்ஷா தக்கா, அண்ணாநகர், மேல்பூண்டி தக்கா, பிரிதிவிமங்கலம் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ரிஷிவந்தியம்-மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே தரைத்தள நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீரை தேக்கி பின்னர் மின் மோட்டார் மூலம் பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நீர் உந்து நிலையத்தில் இருந்து பிரிதிவிமங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் திறன் குறைந்த பழைய மோட்டார்களை பயன்படுத்துவதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக குடிநீரின்றி அவதிப்பட்டு வந்த பிரிதிவிமங்கலம் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்யப்போவதாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். மேலும் இதுகுறித்து பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி, ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரிடமும் நேரில் தெரிவித்தனர். இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் பிரிதிவிமங்கலம் பகுதியில் தற்காலிகமாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதோடு, உடைந்து போன பிரதான குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.