கடலூர்
கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்
|திட்டக்குடி நகராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
திட்டக்குடி
கழிவுநீர் கலந்து
திட்டக்குடி நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட தெற்கு தெரு மற்றும் கீரை கார தெருவில் நேற்று அப்பகுதி மக்கள் வீடு மற்றும் பொது இடங்களில் உள்ள குழாய்களில் குடம் மற்றும் பக்கெட்டுகளில் குடிநீரை பிடித்தனர்.
ஆனால் குடிநீர் பழுப்பு நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அது கழிவுநீர் என தெரியவந்தது. இதையடுத்து குடிநீர் பிடிப்பதை நிறுத்திய அப்பகுதி மக்கள் அருகில் உள்ள வாா்டுகளுக்கு சென்று குடிநீர் பிடித்தனர். மேலும் சிலர் தனியார் வாகனங்களில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர்.
பொதுமக்கள் புகார்
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்த பொதுமக்கள் கழிவுநீர் கலந்த குடிநீரால் பொதுமக்களுக்கு தோலில் அரிப்பு ஏற்படுவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுகாதாரமான குடிநீ்ர் வினியோகம் செய்ய திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தொிவித்தார்.