< Back
மாநில செய்திகள்
தொலைதூர கல்வி இயக்ககத்தில் விண்ணப்பங்கள் வினியோகம்
கடலூர்
மாநில செய்திகள்

தொலைதூர கல்வி இயக்ககத்தில் விண்ணப்பங்கள் வினியோகம்

தினத்தந்தி
|
5 Aug 2023 12:15 AM IST

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சியை துணைவேந்தர் தொடங்கி வைத்தார்

அண்ணாமலைநகர்

தொலைதூரக் கல்வி இயக்ககம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2023- 24-ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் தலைமை தாங்கி விண்ணப்ப படிவங்களின் வினியோகத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குனர் சந்தோஷ்குமார், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின.சம்பத், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இணையதளத்தில் பதிவிறக்கம்

இதையடுத்து துணைவேந்தர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2023- 24-ம் கல்வி ஆண்டிற்கு தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 27 பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவை இல்லை என்ற வகையில் தற்போது 97 சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மொத்தம் 125 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் தற்போது தொடங்கி உள்ளது. அடுத்த வாரம் முதல் இணையதளத்திலும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

60 ஆயிரம் மாணவர்கள்

அடுத்த ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளையும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடத்த அனுமதி பெறப்படும். பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல், தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் எப்படி இருக்கிறதோ அதன்படி தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பாடப்பிரிவுகள் நடத்தப்படும். அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் தமிழகத்தில் 55 படிப்பு மையங்கள் உள்ளன. இந்த படிப்பு மையங்கள் அருகில் உள்ள கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும். வெளிமாநிலங்களில் உள்ள படிப்பு மையங்கள் மூடப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவாகும். தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 86 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தார்கள். இந்த ஆண்டு குறைந்தபட்சம் 50 முதல் 60 ஆயிரம் மாணவர்கள் வரை சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்