ரூ.2-க்கு 50 மில்லி மண்ணெண்ணெய் விநியோகம்: சிவகங்கையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ
|ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதை குறைத்து வருவதாக செய்திகள் வெளியாகின.
தேவகோட்டை,
தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளின் மூலம் மானிய விலையில், சர்க்கரை, சமையல் எண்ணெய்,பருப்பு, கோதுமை மண்ணெண்ணெய் போன்ற பொருள்களும், விலை இல்லா அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசு படிப்படியாக ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதை குறைத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், 950 அட்டைதாரர்கள் கொண்ட கொல்லங்குடி நியாய விலை கடையில் வெறும் 38 லிட்டர் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அனைத்து அட்டைதாரர்களுக்கும் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்து ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொருவருக்கும் 2 ரூபாய்க்கு 50 மில்லி அளவு மண்ணெண்ணெய் விநியோகம் செய்தார். இது குடும்ப அட்டைதாரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் பல அட்டைதாரர்கள் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முன்னர் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் தலா 3 லிட்டர் அளவில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நியாய விலைக் கடைகளுக்கு மண்ணெண்ணெய் குறைத்து வழங்கப்படுவதால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.