< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 378 விநாயகர் சிலைகள் கரைப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 378 விநாயகர் சிலைகள் கரைப்பு

தினத்தந்தி
|
21 Sept 2023 1:00 AM IST

பென்னாகரம்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 378 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய சிலைகளை வைத்து வழிபட்டனர். மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை தொப்பையாறு, ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர். சிலைகள் வைத்த 3-வது நாளான நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்து வரப்பட்டன.

சிலைகள் கரைப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதலைப்பண்ணை காவிரி ஆற்று பகுதிகளில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட சிலைகள் ஒவ்வென்றாக கிரேன் மூலம் காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்த ஒரு சிலையுடன் 5 பேர் மட்டுமே காவிரி ஆற்றுக்குள் சிலையை கரைக்க செல்ல போலீசார் அனுமதித்தனர்.

இதனிடையே நேற்று மாலை கிரேன் உதவியுடன் 378 சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்