சென்னை
நகையை கணவர் அடமானம் வைத்ததால் அதிருப்தி: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 7 மாதத்தில் விபரீத முடிவு
|திருமணமான 7 மாதத்தில் வரதட்சனையாக கொடுத்த நகையை கணவர் அடமானம் வைத்ததால் மனமுடைந்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
சென்னை அடுத்த போரூர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (வயது 30). இவர் போரூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசித்ரா தேவி (25). எம்.காம் பட்டதாரி. இருவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றநிலையில், சீர்வரிசையாக பெண் வீட்டார் 25 பவுன் நகை மற்றும் கார் உள்ளிட்டவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்வரிசையாக கொடுத்த நகையிலிருந்து 10 பவுன் நகையை மனைவி சசித்ராதேவிக்கு தெரியாமல் சேதுபதி எடுத்து அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பீரோவில் வைத்திருந்த நகை மாயமானது குறித்து சசித்ராதேவி கேட்டபோது, சேதுபதி நகையை அடகுவைத்ததாக கூறியதையடுத்து, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக இரு வீட்டாரும் சேர்ந்து தம்பதியை சமரசம் செய்து வைத்தனர். தற்போது 7 மாத கர்ப்பிணியாக சசித்ராதேவி உள்ள நிலையில், வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்னதாக 10 பவுன் நகையை மீட்டு விடுகிறேன் என்று சேதுபதி உறுதியளித்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை சேதுபதி, சசித்ரா தேவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி சிரஞ்சீவி நகர் முதல் குறுக்குத் தெருவில் வசிக்கும் மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், தாய் வீட்டுக்கு வந்த சசித்ரா தேவி தனியறையில் உறங்கினார். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அவரது தாயார் கமலா எழுந்து பார்த்தபோது, சசித்ராதேவி மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் சசித்ராதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி 7 மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது. வரதட்சனையாக கொடுத்த நகையை கணவர் அடமானம் வைத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர் அம்பேத்கர் நகர்-7 வது தெருவில் வசித்து வந்தவர் பன்னீர்செல்வம் (22). வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த இவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த சாத்தாங்காடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.