< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலுக்கு இடையூறு... 4 வயது மகளை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூர தாய்
மாநில செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு... 4 வயது மகளை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூர தாய்

தினத்தந்தி
|
2 Sept 2024 9:35 AM IST

கள்ளக்காதலுக்கு மகள் இடையூறாக இருப்பதாக எண்ணிய சினேகா அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தையா, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சினேகா. இவர்களுக்கு பூவரசி என்ற 4 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து அவரவர் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இதையடுத்து அதே பகுதியில் சினேகா கூலி வேலைக்கு சென்றுவந்தபோது அவருக்கும், அங்கு வேலை பார்த்து வந்த சரத் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சினேகாவின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து சினேகாவை குடும்பத்தினர் கண்டித்தனர். இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு மகள் இடையூறாக இருப்பதாக எண்ணிய சினேகா அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி, சினேகாவும், அவரது பெரியப்பா மகள் கோகிலாவும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பூவரசியை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கிணற்றில் பூவரசியை தூக்கி வீசினர். இதில் குழந்தை கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். கிணற்றில் குழந்தையின் உடல் மிதந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியசினேகா, கோகிலா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்