செங்கல்பட்டு
லாரிக்குள் பட்டாசு கொளுத்தி போட்டதால் தகராறு: தந்தை, மகனை உருட்டுக்கட்டையால் தாக்கிய கும்பல்
|லாரிக்குள் பட்டாசு கொளுத்தி போட்ட தகராறில் தந்தை, மகனை கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஜெ.ஜெ. தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 51). சிங்கப்பெருமாள் கோவில் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்தநிலையில் மினி லாரியில் இவரது மகன் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த செங்குன்றம் அருகே செல்லும் போது அந்த வழியாக சவ ஊர்வலம் வந்தது. இதை பார்த்த அவரது மகன் அந்தோணி விஜில்டன் ராஜா மினி லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு மினி லாரிக்குள் அமர்ந்து இருந்தார். அப்போது சவ ஊர்வலத்தில் வந்த ஒரு கும்பல் மினிலாரி மீது பட்டாசை கொளுத்தி போட்டுள்ளனர். இதனால் பயந்து போன அவர் மினி லாரியை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்.
இது குறித்து அந்தோணி விஜில்டன் ராஜா தனது தந்தைக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போது சுடுகாட்டுக்கு சென்று விட்டு மீண்டும் அந்த வழியாக வந்த கும்பலிடம் யார் லாரிக்குள் பட்டாசை கொளுத்திப்போட்டது என்று ராஜன் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தந்தை, மகன் இருவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கி மினி லாரியின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இது குறித்து ராஜன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.