புதுக்கோட்டை
மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் தகராறு: வாலிபர்களை கத்தியால் குத்தியவர் கைது
|மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
ஆலங்குடி ஆண்டிகுளம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளை சாலையின் இடதுபுறம் நிறுத்தியுள்ளார்.
அப்போது ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த இளமாறன் (23), அஜித்குமார், கலிபுல்லா நகரை சேர்ந்த சிவா (23) ஆகியோர் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக கணேசனின் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர். இதில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
கத்திக்குத்து
இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் தான் வைத்திருந்த கத்தியால் இளமாறன், அஜித்குமார் ஆகியோரை கத்தியால் குத்தினார். இதில் அஜித்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, படுகாயம் அடைந்த இளமாறனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கணேசன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.