< Back
மாநில செய்திகள்
புத்தாண்டில் நண்பர்களுடன் மது அருந்தியதால் தகராறு: காதல் மனைவி கழுத்தை நெரித்து கொலை - நாடகமாடிய கணவன் கைது
சென்னை
மாநில செய்திகள்

புத்தாண்டில் நண்பர்களுடன் மது அருந்தியதால் தகராறு: காதல் மனைவி கழுத்தை நெரித்து கொலை - நாடகமாடிய கணவன் கைது

தினத்தந்தி
|
4 Jan 2023 10:16 AM IST

புத்தாண்டில் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைதானார்.

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 32). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சபீதா (31). இவர்கள் இருவரும் காதலித்து 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் சொந்த வீட்டில் மேல்தளத்தில் வசித்து வந்த நிலையில், தரைத்தளத்தில் சபீதா அழகு நிலையம் சொந்தமாக நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 1-ந்தேதி புத்தாண்டை கொண்டாடும் விதமாக நந்தகுமார் நண்பர்களுடன் சேர்ந்து காசிமேடுக்கு சென்று விட்டார். சபீதா மணலியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதற்கிடையே நந்தகுமார் காசிமேடு கடலுக்குள் படகில் சென்று மதுவிருந்தில் கலந்துகொண்டு, பின்னர் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வந்து வீட்டில் மது அருந்தி கொண்டாடி உள்ளார்.

மறுநாள் காலை குழந்தைகளுடன் சபீதா வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில், நந்தகுமாருக்கும், சபீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்று விட்ட நிலையில், நேற்று காலையில் குழந்தைகள் எழுந்து தாய் சபீதாவை எழுப்பிய போது, எழுந்திருக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, சபீதா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், டாக்டர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சபீதா கழுத்து நெரிக்கப்பட்டு எலும்பு உடைந்து பலியாகி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேக பார்வை கணவர் நந்தகுமார் மீது விழுந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நண்பர்களுடன் காசிமேடு சென்று மது விருந்தில் கலந்து கொண்ட பின்னர், நண்பர்களுக்கு வீட்டில் மது விருந்து வைத்ததாகவும், இதையறிந்து மனைவி சபீதா நேற்று முன்தினம் இரவு கத்தி கூச்சல் போட்டு தன்னுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தான் கையால் அவரது கழுத்தை நெரித்தபோது, அவர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், அவரை படுக்கையில் படுக்க வைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் இரவு தூங்க சென்று விட்டதாகவும், ஆனால் தான் கொலை செய்து விட்டு நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்துவிட்டதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து மனைவியை கொலை செய்ததாக ஆர்.கே.நகர் போலீசார் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாய் இறந்து தந்தை கைதான நிலையில் பராமரிக்க யாரும் இல்லாமல் குழந்தைகள் அநாதையாக நின்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்