காஞ்சிபுரம்
மது குடிப்பதில் தகராறு: நண்பரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு - 4 பேர் கைது
|மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று கிணற்றில் வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (வயது 29). இவர் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது மது மற்றும் கஞ்சா பழக்கத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள புதுப்பாளைய தெரு பகுதியில் பாழடைந்த வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றின் அருகே நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அதன் பிறகு கிரிதரன் வீடு திரும்பவில்லை. மாயமானார்.
இதையடுத்து கிரிதரனின் உறவினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் கிரிதரனை காணவில்லை என்று புகார் மனு அளித்தனர்.
போலீசார் கிரிதரனை தேடிவந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு கிரிதரனின் நண்பர்கள் குடிபோதையில் கிரிதரனை நாங்கள்தான் கொன்றோம் என்று சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த ஹரிஷ் (20), தாமோதரன் (19) மற்றும் 18 வயதான 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கிரிதரனை அடித்துக்கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரிய வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் மேலே தெரிந்த போது மரக்கிளைகள் மற்றும் குப்பைகளை போட்டு மறைத்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஊழியர்கள் எலும்புக்கூடாக உடலை மீட்டனர்.
இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிவகாஞ்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.